Nov 26, 2010

ஞான கிறுக்கன்

குறிஞ்சியாய் பூத்த
நான்
உன் வருகைக்குபின்
நித்திய மல்லியானேன்!

என் கரம்பற்றி
நீ சொல்லிகொடுத்த
பாடத்தையே
எல்லா தேர்வுகளிலும்
எழுதிகிறேன்!!

எனக்கு பட்டமளிக்க
மறுக்கிறார்கள்!
அவர்களுக்கு
எப்படி தெரியும்
நான் படித்தது
உன்னை மட்டுமென்று!!

விசத்தின் கசப்பிற்கு
தேனானது!
என்னை மறுதலித்த
பின்னும் நீ சிந்தும்
சிநேக புன்னகை!!

நம் கல்லூரி
உனக்கோர் வேடந்தாங்கள்!
எனக்கோ கருவறை!!

நிதமும் வழிபடுகிறேன்!
இறுதிநாளில் நாமமர்ந்த
மரத்தடி இருக்கையை!!

என்னையொரு
கிறுக்கனாய் பார்க்கிறார்கள்!
அலைபேசியில்
காதல் வளர்க்கும்
நம் இளவல்கள்!!

அவர்களுக்கு எப்படி தெரியும்!
எனக்கு ஞானம் பிறந்தது
அந்த மரத்தடியிலென்றும்!
நீயே என்
ஞானகுருவென்றும்!!

Nov 12, 2010

அன்றில்



சாதக பறவையானேன்!
எனை தாலாட்டும்
சங்கீதம் நீயானபோது!!

சக்கரவாகமானேன்!
என் தாகம் தீர்க்கும்
மழை நீயானபோது!

பீனிக்ஸ் பறவையானேன்!
எனக்காக நீயழுது
என் தலை கோதியபோது!!

அன்றில் பறவையாகிறேன்!
நம் காதலை நீ கொன்று
என்னை வாழ்த்தசொன்னபோது!!

May 19, 2010

வெள்ளிக் கொலுசொலி

 உன்
வெள்ளிக் கொலுசொலி
வீதியில் கேட்டால்
என் வீட்டு
சன்னலை தாழிடுகிறேன்

தெரு முனையில்
நீ எதிர்ப்படும்போது
ஒளிந்துக்கொள்ள
தேநீரகம் தேடுகிறேன்

என்
தாயுடனும் தங்கையுடனும்
நீ சிரித்து பேச
அமிலம் சுரக்கிறது
என்னுள்

ஏன் வருவதில்லை
முன்போல் ?

இயல்பாய் கேட்க்கும்
உன் பாட்டிக்கு
எப்படி சொல்வேன்?

உன்னை
முத்தமிட துணிந்து
உன் பாதணியிடம்
முத்தம் பெற்றதை.

பொறுக்கி

உடைந்த
வளையல்களையும்
உதிர்ந்த
ரோஜாக்களையும்
பொக்கிசமாய்
சேகரிக்கும்
நானும் ஒரு
பொறுக்கிதான்
உன் பார்வையில்

May 12, 2010

பாருக்குள்ளே நல்ல நாடு

 காவிரி பாலாறு
பிரிதோர் முல்லை
பாலை ஆனதடா - தம்பி
பாலை ஆனதடா!

கயல் விளையாடும்
சேற்று வயலும்
கட்டிடம் ஆனதடா! - தம்பி
கட்டிடம் ஆனதடா!!

பணக்காரன் பட்டியலில்
இந்தியனும் உண்டடா!
பரதேசி வழ்க்கைத்தானடா - தம்பி
பாமரனின் வாழ்க்கைத்தானடா!!

நோட்டுக்கு வாக்களித்தோமடா!
கையூட்டு வாங்கி
வாய்பூட்டு போட்டுக்கொண்டோமடா - தம்பி
சவப்பெட்டி செய்துக்கொண்டோமடா!!

வெற்றரிசி காலமது
வாய்கரிசி காலமடா!
கேடுகெட்ட நாட்டில் - தம்பி
கிலோஅரிசி ரூபாய்தான்டா!!

வெள்ளைக்காரன் தேவலையாட
கொள்ளைக்காரன் அதிகமடா!
சட்டமும் பட்டமும் - தம்பி
காசுக்கென்று ஆனதடா!

வீதிக்கொரு கட்சியடா
சாதிக்கொரு சங்கமடா!
நீதிமட்டும் இல்லையடா - தம்பி
நீதிமட்டும் இல்லையடா!?

வேடிக்கை மனிதரென்று
சொன்னான்டா பாரதி!
சோதனை எலி ஆனமடா - தம்பி
நாட்டு பூனைகள் நாட்டமையடா!

கல்லா நிரம்ப
மது விற்கிறோமடா!
நாளை மாதுவும் விற்போமடா - தம்பி
மாதுவும் விற்போமடா!?

ஒரு முறைதான்
கொன்றானடா கோட்சே!
நிதமும் கொள்கிறோமட - நாம்
நிதமும் கொள்கிறோமட!!







--

Karuppaiah C.

May 5, 2010

அமைதி ஒப்பந்தம்

ஒரு
அமைதி ஒப்பந்தத்தில்
முடிந்துபோனது
நம் காதல் யுத்தம்!

எப்போதும் அமரும்
குழவியகம்தான்
இன்று மட்டும்
கோப்பையின் கடைசித்துளி
கசப்பாய்!!

வழக்கம் போல்
நீயே பேசிக்கொண்டிருக்கிறாய்!
நான் மௌனமாய்
கேட்டுக்கொண்டிருக்கிறேன்!!

ஒப்பந்தத்தின்
இறுதி சரத்தாய்,
நினைவுச்சின்னங்கள்
ஒப்படைப்பு!?

புத்தக மடிப்பில்
படிமமான
ஒற்றை ரோஜா!

முதன்முதலாய்
நான் எழுதிய
ரத்த கடிதம்!

கானகத் தனிமையில்
நாமெடுத்துக்கொண்ட
ரகசிய புகைப்படம்!

எல்லாம் திரும்பதந்த நீ
எப்படி தருவாய்
பேருந்து நெரிசலில்
நான் கொடுத்த
பாதிமுத்ததினை....

என்னிடமிருந்து
பெறாத ஒன்றை
நீ கொடுத்தாய் !
உன் திருமண ஓலை.

நான் கொடுத்த ஒன்றை
எங்கோ தூக்கி
எறிந்தாய் !!
என் இதயம்.

Mar 19, 2010

பாலைவனச் சோலை


பாலைவனச் சோலை



காணும் தூரமெங்கும்
வெம்மை காடுகள்.


ஒளிந்துகொள்ள
பொந்து தேடும்
அரவம்.

நிழல் தேடி
தன் நிழலில் நிற்கும்
ஓணான்.
உறவுகள் எவருமில்லா
சோகத்தில் ஓலமிடும்
பறவை.

நீரற்று போனாலும்
பசுமை மாறா
கள்ளி.


கொம்பு பற்றிய
என் கரங்களில்
குருதி.

வசந்தம் வாரா
பாலைவனத்தில்
காத்திருக்கிறேன்!


என்றாவது பூக்கும்
அந்த மஞ்சள் மலர்!!

Mar 12, 2010

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
சீட்டி பாவடையில்
மிட்டாய் கடிக்கும்
எதிர்வீட்டு சிறுமி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
இடிமன்னர்களை
லாவகமாய் தவிர்க்கும்
அந்த பேருந்து பெண்

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
மல்லிகை நடுவே
ஒற்றை ரோஜா சூடும்
என் அலுவலக தோழி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
உதடு கடித்து
பின் மெல்ல நகும்
என் மனைவி

உன்னையே
ஞாபகப்படுத்துகிறாள்
தனக்கான காதல் கடிதத்தை
என்னிடம் படித்துக்காட்டும்
என் மகள்

உனக்கும் எவரேனும்
ஞாபகப்படுத்துகிறார்களா
என்னையும் எனது காதலையும்

உதிரி பூக்கள்

பசுமை விரும்பி

பட்டதை மட்டும் வெட்டும்
பசுமை விரும்பி!
சுள்ளி பொறுக்கும்
சிறுமி!!

முத்துகள்

ரோஜா
இதழ் விரித்தால்
மகரந்தம் தானே!
உனக்குள் மட்டும்
எப்படி முத்துகள்?

வீணையடி நீஎனக்கு

மீட்டும் வேளை
விரல் அறுந்தும்
வலியில்லை!
வீணையாய் நீ!!